Monday, 19 October 2026

தேசிய பட்டதாரி வேலைவாய்ப்பு கண்காட்சி: 1,400-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமனம் - அமைச்சர் ரமணன் தகவல்.

கோலாலம்பூர், அக்.7-
கடந்த அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (கேஎல்சிசி) நடைபெற்ற ‘தேசிய பட்டதாரி வேலைவாய்ப்பு கண்காட்சி 2026’ வாயிலாக, 1,400-க்கும் மேற்பட்ட வேலைதேடுபவர்கள் பணி நியமனக் கடிதங்களையும் அடுத்த கட்ட நேர்காணல் தேர்ச்சிகளையும் பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணம் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்த இரு நாள் கண்காட்சியில் நேரடியாக நடத்தப்பட்ட நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட திறமையாளர்களுக்கு, மாதத்திற்கு 8,000 ரிங்கிட் வரையிலான கவர்ச்சிகரமான சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

7,200-க்கும் அதிகமான பட்டதாரிகளும் இளைஞர்களும் ஆர்வத்துடன் பங்கேற்ற இந்நிகழ்வு, நாட்டின் தொழிலாளர் சந்தையை மேலும் வலுப்படுத்துவதற்கான அரசின் முக்கிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது. 

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (பெர்கேசோ) ஒருங்கிணைத்த இந்நடவடிக்கை, 13-வது மலேசியத் திட்டத்தின் இலக்குகளுக்கு ஏற்ப, பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதோடு தொழிலாளர் சந்தையில் நிலவும் தகுதிக்கும் பணிக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒரே இடத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை இக்கண்காட்சி ஏற்படுத்திக் கொடுத்ததாகப் பங்கேற்பாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 

இக்கண்காட்சி மூலம் ‘கேபிஜே ஹெல்த்கேர்’ நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற 31 வயதான ஜானனி அரிஃபா கூறுகையில், பாரம்பரிய வேலைதேடும் முறைகளைக் காட்டிலும், நிறுவன அதிகாரிகளுடன் நேரடியாகக் கலந்துரையாட இத்தளம் பேருதவியாக இருந்ததாகக் குறிப்பிட்டார். 

அதேபோல், துங்கு அப்துல் ரஹ்மான் மேலாண்மை தொழில்நுட்பப் பல்கலைக்கழக பட்டதாரியான லீ ஜியாங் ஹுய் (21), பட்டதாரிகள் தங்கள் நேர்காணல் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், கனவு லட்சியங்களை அடையவும் இதுவொரு சிறந்த தளமாக அமைந்தது என்றார்.

முதலாளிகளின் கோணத்திலும், உள்ளூர் திறமையாளர்களை விரைவாகக் கண்டறிந்து தேர்வு செய்ய இந்த முகாம் ஒரு சிறந்த பாலமாகத் திகழ்ந்துள்ளது. 

இது குறித்து ஐபிஎம் மலேசியா நிறுவனத்தின் பிரதிநிதி ஐமி செ ரஹிம் விவரிக்கையில், முதல் நாளிலேயே 93 விண்ணப்பதாரர்கள் தங்கள் நிறுவன அமைப்பில் நேரடியாகப் பதிவு செய்ததாகத் தெரிவித்தார். அவர்களில் களத்திலேயே நேர்காணல் செய்யப்பட்ட 8 பேரில், 3 பேர் உடனடியாகப் பணிக்குச் சிபாரிசு செய்யப்பட்டதுடன், இருவர் அடுத்தகட்ட மொழி - திறன் பரிசீலனைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இக்கண்காட்சியில் ஊழியர் சேம நிதியகம், பேங்க் நெகாரா மலேசியா, புர்சா மலேசியா, வருமான வரித் துறை போன்ற நாட்டின் முன்னணி நிதி அமைப்புகளும், பிரசாரானா, மலேசியா ஏர்போர்ட்ஸ், எல்டிஏடி போன்ற பெருநிறுவனங்களும் பங்கேற்றுப் பல்வேறு வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கின. தகவல் தொடர்பு, நிதி, உற்பத்தி, தொழில்நுட்பச் சேவைகள், சுகாதாரம் உள்ளிட்ட பல்துறை வாய்ப்புகள் இதில் அடங்கும்.

குறிப்பிடத்தக்க வகையில், அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் 52.91 சதவீதத்திற்கும் அதிகமான பணிகளுக்கு மாதச் சம்பளம் 3,000 ரிங்கிட்டுக்கும் மேல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் நிதி நிர்வாகி பதவிக்கு 3,000 ரிங்கிட் தொடக்கச் சம்பளமாகவும், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி போன்ற உயர்மட்டப் பதவிகளுக்கு மாதத்திற்கு 17,000 ரிங்கிட் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Admin - SabthamsTV.