அலோர் காஜா, அக்.18-
மலாக்கா மாநிலத்தில் மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் (எச்ஆர்டி கார்ப்) மூலம் மொத்தம் 6,995 பயிற்சி மானிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 37.03 மில்லியன் ரிங்கிட் நிதி உதவியுடன் 39,489 பயிற்சிக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பயிற்சி வாய்ப்புகள் உத்தேசிக்கப்பட்ட இலக்குக் குழுக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், எச்ஆர்டி கார்ப் நிறுவனத்தின் அமலாக்க அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் அதன் ஆளுகையையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
இத்திட்டத்தின் அமலாக்கத்தை மேலும் முறைப்படுத்தவும் திறம்படச் செய்யவும் இந்த அமைப்பைச் சீரமைக்கச் சற்று கால அவகாசம் தேவைப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மலாக்காவில் இதுவரை 24,729 பேர் பயிற்சி பெற்றுள்ளதாகவும், 30.14 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 7,734 கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"ஒரு அமைப்பை முறைப்படுத்தவும், நல்லாட்சிக்கு ஏற்ப வெளிப்படைத்தன்மையுடன் மாற்றி நடைமுறைப்படுத்தவும் எளிதில் இயலாது. அதற்கு கணிசமான காலம் பிடிக்கும். இந்த மேம்பாடுகளை மேற்கொள்வதில் காட்டிய தீவிர முயற்சிகளுக்காக எச்ஆர்டி கார்ப் குழு முழுவதற்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்," என்று இங்கு நடைபெற்ற எச்ஆர்டி கார்ப் 'கொள்கையிலிருந்து மக்களுக்கு' எனும் 'பக்கெட் டாக்' பிரசாரப் பயணப் பட்டறைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் எச்ஆர்டி கார்ப் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஷமீர் அஜிஸும் உடன் இருந்தார்.
மேலும், எச்ஆர்டி கார்ப் நிதியுதவி அளிக்கும் ஒவ்வொரு பயிற்சி வகுப்பும், அவை உண்மையிலேயே நடத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிக்கின்றனவா என்பதை உறுதி செய்ய எச்ஆர்டி கார்ப் அதிகாரிகள் நேரிலோ அல்லது இணைய வழியிலோ தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று அமைச்சர் கூறினார்.
தங்கள் திறன்களை உயர்த்திக் கொள்ள விரும்பும் தொழிலாளர்கள், வேலை தேடும் பட்டதாரிகள், புதிய தொழிலைக் கட்டியெழுப்ப விரும்பும் நபர்கள் என அனைவரும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் ஊக்குவித்தார்.
வேறொரு சூழலில் பேசிய அவர், நாடு முதியோர் மக்கள்தொகையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பராமரிப்புப் பயிற்சிகள் மூலம் பெண்களும் பெரிதும் பயனடையலாம் என்று குறிப்பிட்டார்.
வருங்காலத் தேவையைப் பூர்த்தி செய்யப் பராமரிப்பாளர்களின் தேவை தற்போதே பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும், ஒரு முதியோர் சமூகத்தை நோக்கி நகரும் போது நமக்குப் பராமரிப்பாளர்களே மிகவும் அவசியமானவர்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.admin@sabthamsTV